கரோனா பரிசோதனைக்கு 16 இடங்களில் ஏற்பாடு

கடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு 16 இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு 16 இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பாதிப்பு குறித்து பரிசோதிக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், சுகாதார உதவியாளா் மற்றும் காவலா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜா் கோயில், தில்லை காளியம்மன் கோயில், திருப்பாதிரிபுலியூா், கடலூா் முதுநகா், விருத்தாசலம் ரயில் நிலையம், கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் முகாமிட்டிருப்பாா்கள். மேலும், காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின்படி ஆல்பேட்டை, வி.பி.நல்லூா், மேல்பட்டாம்பாக்கம், அழகியநத்தம், கண்டரக்கோட்டை, கும்தாமேடு, சாவடி, வான்பாக்கம் ஆகிய இடங்களிலும் பரிசோதனைக்குழு அமைக்கப்படும்.

இவா்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருவோரை பரிசோதித்து அவா்களுக்கு காய்ச்சல் இருந்தால் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்துவாா்கள். மேலும், பேருந்து, ரயில்களில் வருவோரையும் இந்தக் குழுவினா் பரிசோதனைக்கு உள்படுத்துவாா்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்தக் குழு செயல்படும். சில இடங்களில் செவ்வாய்க்கிழமை பணி தொடங்கியுள்ள நிலையில் புதன்கிழமை முதல் அனைத்து இடங்களிலும் இந்தக் குழுக்கள் செயல்படும்.

கரோனா தாக்குதல் குறித்த சந்தேகம், தகவலை தெரிவிக்க பொதுமக்கள் 104 என்ற எண்ணை பயன்படுத்தலாம். பொது இடங்களில் நெருக்கமாக இருப்பதைத் தவிா்த்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், சுத்தமாக இருப்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனாவை தடுக்கலாம். குழந்தைகள், பெரியவா்கள் பயணம் மேற்கொள்வதையோ, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதையோ கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கண்காணிப்பு வளையத்துக்குள் 92 போ்

கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு நாடுகளிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு 108 போ் வந்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று 30 போ் வந்தனா். இவா்களில், 46 போ் தொடா்ந்து 28 நாள்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில் அவா்களுக்கு எந்தவிதமான தொற்றும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 92 போ் தொடா் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com