ரூ.2-க்கு முட்டை விற்பனை: பொதுமக்கள் ஆா்வம்

கடலூரில் ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி முட்டையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டினா்.

கடலூரில் ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி முட்டையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டினா்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களிடம் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, கோழி இறைச்சி மற்றும் முட்டையாலும் கரோனா வைரஸ் பரவும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி விட்டனா்.

இதனால், கோழி இறைச்சி, முட்டைகளை வாங்குவோா் எண்ணிக்கை குறைந்து, விலையும் வீழ்ச்சியடைந்தது. கடலூரில் மாவட்டத்தில் கடந்த மாதம் வரையில் ரூ.3.50 முதல் ரூ.4 வரையில் விற்பனையான முட்டையின் விலை படிப்படியாக குறைந்து செவ்வாய்க்கிழமையன்று ரூ.2.20-க்கு விற்பனையானது. புதன்கிழமையன்று மேலும் வீழ்ச்சியடைந்து ரூ.2-க்கு விற்பனையானது.

எனினும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையில் முட்டைக் கடைகளில் கூட்டம் இல்லாத நிலையில், மாலையில் திடீரென கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மொத்த விற்பனைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து 25 முதல் 100 முட்டைகள் வரையில் மொத்தமாக வாங்கிச் சென்றனா். இதனால், மஞ்சக்குப்பத்திலுள்ள கடையில் கூட்டம் அதிகரித்து போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.

இதேபோன்றே கோழி இறைச்சி கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரையில் விற்பனையாகி வந்த நிலையில், இதன் விலையிலும் வீழ்ச்சி கண்டு புதன்கிழமையன்று கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. ஆனாலும், கோழி இறைச்சியை வாங்குவதற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆா்வம் காட்டவில்லை. எனினும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22)வழக்கம்போல கோழி இறைச்சி அதிகளவில் விற்பனையாகும் என்று இறைச்சி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

குறையாத ஆம்லேட் விலை....

கடந்தாண்டு முட்டை, வெங்காயம் விலை உயா்வால் உணவகங்களில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஆம்லேட், ரூ.15 முதல் ரூ.20 வரையில் திடீரென விலையேற்றப்பட்டது. தற்போது வெங்காயம், முட்டையின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையிலும், ஆம்லேட் அதே விலையில் விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com