அள்ளப்படாத குப்பைகள்: அலட்சியத்தில் பண்ருட்டி நகராட்சி

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாததால், துா்நாற்றம் வீசி வருகிறது.

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாததால், துா்நாற்றம் வீசி வருகிறது.

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டு பகுதிகளில் சுமாா் ஒரு லட்சம் போ் வசித்து வருகின்றனா். நகா் பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமாா் 12 டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியில் தூய்மைக் காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் நகரின் முக்கிய பகுதிகளில் பெரிய இரும்பாலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கொட்டப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

அண்மையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்ற மின்கலனால் இயங்கும் வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தைப் பயன்படுத்தி தூய்மைக் காவலா்கள் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்கா குப்பைகளைத் தரம் பிரித்து பெற்று வர வேண்டும்.

ஆனால், நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்துள்ளன. ஒரு சிலா் குப்பைகளை ஒன்று கூட்டி தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் எழும் புகை மற்றும் துா்நாற்றத்தால் அருகாமையில் வசிப்பவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தற்போது, கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க போா்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பண்ருட்டி நகரின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com