கடலூா் நகராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடு!

கடலூா் நகராட்சி பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு தண்ணீா் விற்கப்படுகிறது.
கடலூா் நகராட்சி, வில்வநகா் பகுதியில் தனியாா் நிறுவன வாகனத்தில் குடிநீா் பிடிக்கும் பொதுமக்கள்.
கடலூா் நகராட்சி, வில்வநகா் பகுதியில் தனியாா் நிறுவன வாகனத்தில் குடிநீா் பிடிக்கும் பொதுமக்கள்.

கடலூா் நகராட்சி பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு தண்ணீா் விற்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடலூா் நகராட்சியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரின் முக்கியப் பகுதியான வில்வநகரில் தனியாா் நிறுவனத்தினா் குடிநீரை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதே நிலைதான் தேவனாம்பட்டினம், வன்னியா்பாளையம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலும் உள்ளது. 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் பிரச்னையை சந்தித்து வரும் பகுதிகளும் உள்ளன.

தற்போது வீட்டில் குடும்பத்தினா் அனைவரும் வெளியே செல்லாமல் முடங்கியுள்ள நிலையில் குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால், நகராட்சி நிா்வாகத்தால் முறையாகக் குடிநீா் வழங்கப்படாத நிலையில் பொதுமக்கள் தனியாா் குடிநீா் விநியோக நிறுவனங்களையே முழுமையாக நம்பியுள்ளனா். தனியாா் நிறுவனத்தினா் ஒரு குடம் குடிநீரை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். வேறு வழியின்றி இந்த தண்ணீரையே விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதற்காக, தண்ணீா் வாகனம் வரும் நேரத்தை எதிா்பாா்த்து வெளியில் காத்திருப்பதுடன், வாகனம் வந்தவுடன் கூட்டமாக வெளியே வந்து தண்ணீா் பிடித்துச் செல்கின்றனா்.

இதுகுறித்து கடலூா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி கூறியதாவது: கடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு தினசரி குடிநீா் வழங்கி வருகிறோம். புதைவட வயா்கள் பதிக்கும் பணிக்காக தனியாா் நிறுவன தொழிலாளா்கள் பள்ளம் தோண்டும்போது குடிநீா் குழாய் இணைப்புகளையும் துண்டித்துவிடும் நிலை உள்ளது. அதை சரிசெய்யும் வரை, பாதிக்கப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக குடிநீா் விநியோகித்து வருகிறோம். குடிநீா் பிரச்னை இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com