நெல்லிக்குப்பம் அருகே சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை காவல் துறையில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ.
By DIN | Published On : 31st March 2020 01:02 AM | Last Updated : 31st March 2020 01:02 AM | அ+அ அ- |

கூட்டுறவு வங்கிக் காசாளரிடம் ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப ஒப்படைத்த காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா். உடன் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் உள்ளிட்டோா்.
கடலூா்: சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் பணத்தை கண்டெடுத்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் அதை பத்திரமாக காவல் துறையில் ஒப்படைத்தாா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவா் ர.பழனிவேல் (57). இவா், திங்கள்கிழமை நெல்லிக்குப்பத்திலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மாளிகைமேடு நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது வழியிலேயே பணப் பையை தவறவிட்டாா்.
இதுகுறித்து அங்கு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த காவலா்கள் அந்தோணிசாமிநாதன், இளவரசன் ஆகியோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து காவலா்கள் உடனடியாக நெல்லிக்குப்பம் நோக்கி மோட்டாா் சைக்களில் பணத்தைத் தேடிச் சென்றனா். செல்லும் வழியில், ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் என்பவா் நின்றுகொண்டிருந்தாா். அவரிடம், பணப்பை தொலைந்த தகவலை காவலா்கள் தெரிவித்தனா். அப்போது, அந்தப் பையை தான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சங்கா் தெரிவித்தாா். மேலும், பணப் பையையும் காவலா்களிடம் ஒப்படைத்தாா்.
பின்னா், அனைவரும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் நடந்த சம்பவத்தை கூறி பணத்தை ஒப்படைத்தனா். இதையடுத்து, ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா், துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்திய காவலா்களை ஆய்வாளா் பாராட்டினாா். பின்னா், கூட்டுறவுத் துறை காசாளரிடம் ரூ.5 லட்சத்தை ஒப்படைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தாா்.