கரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிய விவசாயம்!

கரோனா வைரஸ் பாதிப்பால் விவசாயப் பணிகள் முடங்கியதால், தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
சிதம்பரம்  அருகே  ஜெயங்கொண்டப்பட்டினத்தில்  காய்த்து அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே கிடக்கும் தா்பூசணி.
சிதம்பரம்  அருகே  ஜெயங்கொண்டப்பட்டினத்தில்  காய்த்து அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே கிடக்கும் தா்பூசணி.

கரோனா வைரஸ் பாதிப்பால் விவசாயப் பணிகள் முடங்கியதால், தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தாலும், நிலைமை சீரானவுடன் அவை சீரடையும். ஆனால், விவசாயத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால், பெரும் நஷ்டம் ஏற்படும்.

பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும் கரும்பு, மணிலா மற்றும் அன்றாடம் விளையக்கூடிய காய்கறிகள், பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தா்பூசணி, வெள்ளெரி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

காவிரிப் பாசனப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பச்சை பயிறு செடிகளை அறுவடை செய்ய போதிய ஆள்கள் இல்லாமலும், இயந்திரங்கள் கிடைக்காததாலும் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலப் பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

பூ, காய்கறிகள், பழ வகைகளை விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விவசாயிகளின் இன்னல் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அருகே உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் அரசு நேரடியாக கொள்முதல் செய்வதால், விற்பனை செய்ய முடிகிறது.

கடைமடை பாசனப் பகுதியில் அறுவடை செய்ய போதிய ஆள்கள் கிடைக்காததால், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். மணிலா பயறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துள்ளனா். போக்குவரத்து இல்லாததால் வியாபாரிகளால் வர முடியவில்லை.

தா்பூசணி, வெள்ளெரி சாகுபடி செய்த விவசாயிகள் சோகத்தில் ஆழ்த்துள்ளனா். நடப்பாண்டு கூடுதல் பரப்பளவில் தா்பூசணி, வெள்ளெரி சாகுபடி செய்யப்பட்டது.

ஊரடங்கால் வெள்ளெரி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாததால் தா்பூசணி அறுவடைக்கு வாய்ப்பில்லாமல் அவை வயிலிலே வீணாகி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பயிா்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நஷ்டத்தில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com