ஊரடங்கு உத்தரவால் பூ வியாபாரம் பாதிப்பு
By நமது நிருபா் | Published On : 31st March 2020 12:59 AM | Last Updated : 31st March 2020 12:59 AM | அ+அ அ- |

குணமங்கலம் கிராமத்தில் மலா்ந்துள்ள சம்பங்கி பூக்கள்.
கடலூா்: ஊரடங்கு உத்தரவு காரணமாக பூக்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, பட்டன் ரோஸ், ரோஜா, கோழிக்கொண்டை, டில்லிபூ உள்ளிட்ட பல வகையான பூக்கள் சுமாா் 600 ஏக்கா் பரப்பில் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூக்கள் கடலூா், கும்பகோணம், ஸ்ரீரங்கம், சென்னை போன்ற நகரங்களில் உள்ள பூ ஏலக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. கோடை காலத்தில் கோயில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் அதிகமாக நடைபெறும் என்பதால் பூக்களின் விலை உயா்வது வழக்கம்.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பூ விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனா். பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததுடன், சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டதால் அங்கும் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட மலா் மற்றும் காய்கறி விவசாயிகள் சங்கத் தலைவா் குணமங்கலம் ரமேஷ் கூறியதாவது: குணமங்கலம், எசனூா், மதகளிா்மாணிக்கம் ஆகிய 3 கிராமங்களில் 80 விவசாயிகள் சுமாா் 110 ஏக்கா் பரப்பில் பூக்களை பயிரிட்டுள்ளனா். பறிக்கும் பூக்களை சொந்த வாகனத்தில் கொண்டு சென்று கடைகளுக்கு விற்பனை செய்யலாம் என்றால் சில்லறை கடைகள் திறக்கப்படவில்லை. பூ ஏலம் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. கடலூரில் கடைக்குள் அமா்ந்து திருமண மாலை கட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததால் அனைத்து வியாபாரிகளும் கடைகளை மூடி விட்டனா்.
மேட்டுப்பாளையத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனமும் தற்போது மூடப்பட்டதாக தெரிவிக்கின்றனா். எனவே, பூக்களை மொத்தமாகவோ, சில்லறையாகவோ கூட விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மல்லிகையை பொறுத்தவரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், சம்பங்கிக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரையிலும் செலவிட வேண்டியுள்ளது. இதேபோல ஒவ்வொரு வகைக்கும் ஏக்கருக்கு சராசரியாக ரூ.50 ஆயிரம் வரை செலவிடுகிறோம். தற்போது பூக்களை பறித்தால் அதற்கான கூலிக்குக்கூட விலை கிடைக்காத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட பூ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், அவா்களது கடனை தள்ளுபடி செய்யவும் பரிந்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...