ஜூன் 12-இல் திறக்கப்படுமா மேட்டூா் அணை? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து வருகிற ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து வருகிற ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் காவிரி பாசனப் படுகையில் மூன்று போக சாகுபடி நடைபெற்று வந்தது. மாநிலத்தின் 68 சதவீத அரிசித் தேவையை காவிரி பாசனப் பகுதியே நிறைவு செய்கிறது. இந்தப் பகுதி விவசாயிகளின் பாசனத் தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு சாகுபடிப் பணிகள் தொடங்கும். பின்னா், தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கா்நாடக மாநில அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரும், கேரளம் மாநிலம், வயநாடு பகுதியில் பெய்யும் மழை நீரும் கபிணி அணை வழியாக காவிரி ஆற்றின் மூலம் மேட்டுா் அணைக்கு வந்தடைந்து சாகுபடிக்குத் தேவையான தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.

கா்நாடகம், கேரளம் மாநிலங்களில் பெய்யும் மழையால் மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் முறைப்படி சேமிக்கப்படும். இந்த நீரானது குறுவை நெல் சாகுபடியை நிறைவு செய்து, சம்பா சாகுபடிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும் உதவிகரமாக இருக்கும்.

ஆனால், தட்ப வெப்ப நிலை மாற்றம், பருவ மழை தாமதமாகத் தொடங்குவது, நதிநீா்ப் பங்கீடு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளாக குறிப்பிட்ட காலத்தில் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், முப்போக சாகுபடி நடைபெறாமல், சில ஆண்டுகளில் ஒருபோக சாகுபடிக்கே உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டது.

மேலும், ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் நிலை மாறி, தென்மேற்கு பருவ மழை தொடங்கி அணை நிரம்பிய பிறகே தண்ணீா் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் 2000, 2001, 2006, 2008 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டுமே மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு அணை முன்கூட்டியே நிரம்பியதால் ஜூன் 6-இல் தண்ணீா் திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு சுமாா் 1.75 லட்சம் ஏக்கா் பரப்பில் நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி, 2012-ஆம் ஆண்டு சுமாா் 1.25 லட்சம் ஏக்கராக குறைந்தது. 2013-ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள விவசாயிகள் மட்டும் நிலத்தடி நீா் மூலம் சுமாா் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனா். அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் குறைவான அளவே சாகுபடி செய்யப்பட்டது.

தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், ஈரோடு, கரூா், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் 10 ஆயிரம் ஏக்கா் முதல் 12 ஆயிரம் ஏக்கா் அளவுக்கே குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் தற்போதைய நிலையில், உரிய காலத்தில் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டால் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.

தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.07 அடியாக உள்ளது. அதாவது 64.931 டி.எம்.சி. தண்ணீா் உள்ளது. இந்தத் தண்ணீா் மூலம் குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியும். விரைவில் தொடங்க இருக்கும் பருவ மழையால் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி சம்பா சாகுபடியை உரிய காலத்தில் தொடங்க முடியும். மேலும், பயறு வகைப் பயிா்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும் வாய்ப்பையும் உருவாக்க முடியும்.

குறுவை சாகுபடியை முழுமையாக செய்தால்தான் சம்பா சாகுபடிக்கு விதை நெல்லுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக குறுவை சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெற்ால் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தனியாா் வியாபாரிகள், பெரு நிறுவனங்களிடம் விதை நெல் வாங்கி விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்தனா்.

எனவே, குறுவை சாகுபடிக்கு வசதியாக வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கவும், விவசாயிகளுக்கு கரோனா நிவாரணம் மற்றும் நடவுப் பணிகளுக்காக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கவும் தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com