சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் ஊழியர்கள் போராட்டம் நடத்த முயற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் ஊழியர்கள் போராட்டம் நடத்த முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் ஊழியர்கள் போராட்டம் நடத்த முயற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் சிக்கியதால் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி பல்கலைக்கழகத்தை ஏற்றது. இதைத் தொடர்ந்து நிதிச் சிக்கலை குறைப்பதற்காக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 4000 பேர் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி முடிந்த ஊழியர்களுக்கு தற்போது மீண்டும் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்ட உள்ளது.

இதைக் கண்டித்தும், தங்கள் ஒப்பந்த காலத்தை நீடிக்காமல் மீண்டும் பல்கலைக்கழகத்திலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தியும் பணி நிரவல் ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை பணி நிரவல் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்த ஒன்று திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 தகவலறிந்து வந்த காவல்துறையினர் தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் போராட்டம் நடத்தக் கூடாது. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்த வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் காவல்துறையினர் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர். அங்கு பதிவாளர் டாக்டர். கிருஷ்ணமோகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்து விளக்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பணி நிரவல் ஊழியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் குமரவேல், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட தங்களுக்கு 3 ஆண்டு பணி நிரவல் முடிந்து உள்ளதால் தங்களை மீண்டும் பல்கலைக்கழக பணிக்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சுழற்சி அடிப்படையில் மற்ற ஊழியர்களை பணி நிரவல் செய்து அனுப்ப வேண்டும் எனவும், தங்களது கோரிக்கையை அரசு ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com