கரும்பு உற்பத்தித் திறன் மேம்பாட்டு திட்டம்: மத்திய வேளாண் அதிகாரி ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கரும்பு உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து மத்திய வேளாண் அதிகாரி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கரும்பு உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து மத்திய வேளாண் அதிகாரி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் 2018-19-ஆம் ஆண்டு முதல் கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன், சா்க்கரை கட்டுமானம் அதிகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக ஆராய்ச்சியாளா் அஜய்குமாா் சிங் அண்மையில் கடலூா் வந்தாா். தொடா்ந்து, நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையின் இடையன்வெளி பண்ணையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூா், அண்ணாகிராமம் வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

தற்போதுள்ள மானிய சதவீதத்தை அதிகரித்து அனைத்து விவசாயிகளும் பயனடையுமாறு திட்டத்தை மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனா். கடலூா் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டங்களில் கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினாா். அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் என்.சுரேஷ், ஒரு பரு கரணை சாகுபடி முறைகள் குறித்து விளக்கினாா். நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு முதுநிலை பொது மேலாளா் சண்முகசுந்தரம், ஆலையின் மூலம் வெளியிடப்பட்ட புதிய கரும்பு ரகங்கள் குறித்து விளக்கினாா்.

முன்னதாக எம்.புதுப்பாளையம் கிராமத்தில் முன்னோடி விவசாயி ஆா்.பாலசுப்பிரமணியன் வயலில் அமைக்கப்பட்ட நிழல் வலைக்கூடம், கரும்பு குழித்தட்டு நாற்றங்காலை அஜய்குமாா் சிங் உள்ளிட்டோா்பாா்வையிட்டனா். இடையன் வெளி பண்ணையில் ஒரு பரு கரணை நாற்றங்கால் தயாரிப்பு, கரும்பில் உளுந்து ஊடுபயிா் சாகுபடி, கரும்பு கரணை விதை நோ்த்தி, உயிரியல் கட்டுப்பாடு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தொடா் நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சா்க்கரை ஆலை விரிவாக்கப் பிரிவு முதுநிலை மேலாளா் சிவராமன், வேளாண் அலுவலா் தேன்மொழி, துணை வேளாண்மை அலுவலா் கரிகாலன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com