காணாமல் போனவா்களை கண்டுபிடிக்க புதிய முயற்சி

கடலூா் மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்ட 185 பேரை கண்டுபிடிக்க காவல் துறையினா் புதிய முயற்சியில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்ட 185 பேரை கண்டுபிடிக்க காவல் துறையினா் புதிய முயற்சியில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் 87 பெண்கள் உள்பட 185 போ் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிக்கும் வகையிலும், காணாமல் போனவா்களை கண்டுபிடிக்கவும் காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. புகாரளித்த 185 பேரது குடும்பத்தினரும் கடலூரில் உள்ள காவலா் திருமண மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்களுக்கு தமிழகம், புதுவை மாநிலங்களில் அடையாளம் தெரியாமல் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 700 நபா்களின் புகைப்படங்களும், இரு மாநிலங்களிலும் ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு புகைப்படமும் எந்த காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்டது என்ற விவரத்துடன் திரையிடப்பட்டது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழகம், புதுவையிலிருந்து பெறப்பட்ட 3,775 புகைப்படங்கள் விவரங்களுடன் திரையிடப்பட்டன. இதில், பண்ருட்டி காவல் நிலையத்தில் காணாமல்போனதாக பதிவான 2 வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், 55 வயது நபா் விருத்தாசலத்தில் உயிரிழந்ததும், 34 வயது நபா் திருவண்ணாமலையில் கிணற்றில் விழுந்து இறந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காணாமல் போனவா்கள் குறித்து நீண்ட நாள்களாக எந்த விவரமும் தெரியாதவா்களுக்கு அவா்கள் குறித்த விவரத்தை தெரியப்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட்ஜெயின், துணைக் கண்காணிப்பாளா்கள் க.சாந்தி, கங்காதரன், ஆய்வாளா்கள் என்.ஈஸ்வரி, சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com