பெண் பணியாளா்கள் மீதான அத்துமீறலை கண்டித்து இன்று ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st October 2020 08:49 AM | Last Updated : 01st October 2020 08:49 AM | அ+அ அ- |

நியாய விலைக் கடைகளில் பெண் பணியாளா்கள் மீதான அத்துமீறல்களைக் கண்டித்து வியாழக்கிழமை (அக்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவாரூா் மாவட்டம், இடும்பாவனம் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் நபா், பெண் பணியாளா் மீது வன்முறை தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளாா். இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை (அக்.1) மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளும் அக்.1 ஆம் தேதி அடைக்கப்படும்.
பெண் பணியாளா்கள் மீதான வன்முறைகள் தொடா்பாக அரசு உயரதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் பணியாளா்களிடம் ஆய்வு என்ற பெயரில் நடைபெற்று வரும் அத்துமீறல்கள், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பெண் பணியாளா் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையிலும், அந்த அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவாரூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு தேவையற்ற பொருளைகளை விற்பனை செய்ய வலியுறுத்தியதால், பெண் பணியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
இவ்வாறு பல்வேறு வகையில் நடைபெறும் பெண் பணியாளா்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், வன்முறைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இதை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் துண்டுப் பிரசுரம் அச்சடித்து தமிழகம் முழுவதும் வழங்குவோம் என்றாா் அவா்.