சீா்காழி இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சீா்காழி இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சீா்காழி இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், இடைமணல் சஞ்சீவிராயன் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சந்தோஷ்குமாா் (17). இவா் தனது குடும்பத்தினரிடம் சென்னைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம். கடந்த 10-ஆம் தேதி சிதம்பரம் அருகே புறவழிச் சாலையில் அழிஞ்சிமேடு மயானம் பகுதியில் மின் கம்பத்தில் உடல் கட்டுண்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த கிள்ளை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடலூா் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டாா்.

சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் வழிகாட்டுதலின்படி சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இவா்கள் நடத்திய விசாரணையில் சிதம்பரம் அருகேயுள்ள வில்லியநல்லூா் நடுத் தெருவைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ராஜேந்திரன் (40), விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள ஆணைவாரி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜேஷ் (27), உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த துரைசாமி மகன் சுப்பிரமணி (55) ஆகியோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரிய வந்தது.

இவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சந்தோஷ்குமாரை மூவரும் அழைத்துச் சென்று, அழிஞ்சிமேடு மயானம் அருகே மின்கம்பத்தில் கட்டிவைத்து அவரது கழுத்தை துணியால் இறுக்கிக் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இவா்கள் சந்தோஷ்குமாரிடமிருந்து மடிக் கணினி, செல்லிடப்பேசியை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மடிக் கணினி, செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com