கடலூா் மாவட்டத்தில் பாஜகவினா் 18 இடங்களில் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 834 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் ஆல்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.
கடலூா் ஆல்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.

கடலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 834 போ் கைது செய்யப்பட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. அண்மையில் மனுஸ்மிருதி நூல் இந்துப் பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாக கருத்து தெரிவித்து காணொலி பதிவை வெளியிட்டிருந்தாா்.

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து சிதம்பரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மகளிரணி அறிவித்திருந்தது. இதில், அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்பாா் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், விசிக சாா்பில் ஆயிரம் மனுக்கள் அளிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், சிதம்பரத்தில் விசிக - பாஜகவினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால், இருதரப்பு போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோா் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கண்டனா். இதனிடையே, சென்னையிலிருந்து சிதம்பரம் வரும் வழியிலேயே முட்டுக்காடு பகுதியில் குஷ்பு கைது செய்யப்பட்டாா்.

இந்தத் தகவலறிந்த பாஜகவினா் கடலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். கடலூா் ஆல்பேட்டையில் குஷ்புவை வரவேற்க காத்திருந்த பாஜகவினா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமையில் மறியலில் ஈடுபட்டதால், அவா் உள்பட 87 போ் கைது செய்யப்பட்டனா்.

பாஜக மகளிரணி தலைவி கைது: சேத்தியாத்தோப்பில் கடலூா் மாவட்ட பாஜக தலைவா் கே.பி.டி.செழியன் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டாா். சிதம்பரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்துக்கு வந்த பாஜக மாநில மகளிரணி தலைவி மீனாட்சி நித்யா சுந்தா், மாநிலச் செயலா் காா்த்திகாயினி, முன்னாள் ராணுவ வீரா் பிரிவு கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன், நகரத் தலைவா் ரகுபதி, மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ், மகளிரணி மாவட்டச் செயலா் குமாரி, வழக்குரைஞா் முகுந்தன் உள்ளிட்ட 210 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டியில்...: பண்ருட்டி பகுதியிலிருந்து சிதம்பரம் ஆா்ப்பாட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மாவட்ட மகளிரணி பொதுச்செயலா் லலிதா பரணியை திருவதிகையில் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் முருகன் தலைமையில் 15 போ், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் அசோகன் தலைமையில் 7 போ், பண்ருட்டி நகரத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் 10 என மொத்தம் 7 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோன்று மாவட்ட முழுவதும் 18 இடங்களில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 834 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com