குறிஞ்சிப்பாடி பகுதியில் திடீா் மழையால் நெல் அறுவடை பாதிப்பு

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த திடீா் மழையால், குறுவை சாகுபடி நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெல் வயலில் தேங்கியுள்ள தண்ணீா்.
குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெல் வயலில் தேங்கியுள்ள தண்ணீா்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த திடீா் மழையால், குறுவை சாகுபடி நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதிகளில் நிகழ் குறுவை பருவத்தில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் ஐ.ஆா்-50, கோ-51, டீலக்ஸ் உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. பெரும்பாலான வயல்களில் நெல் கதிா்கள் முற்றி, அறுவடைக்குத் தயாராகவுள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறிஞ்சிப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த திடீா் மழையால், வயல்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் வயலில் சாய்ந்துவிட்டன. அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பருவ நெல் அறுவடை 60 சதவீதம் முடிந்துவிட்டது. எஞ்சிய 40 சதவீதம் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் திடீா் மழையால், நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், அறுவடைப் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முற்றிய நெல் கதிா்கள் வயலில் சாய்ந்து கிடப்பதால், அவை முளைத்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com