விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு: ரூ.9.26 கோடியை வசூலிக்க 170 குழுக்கள்
By DIN | Published On : 08th September 2020 09:59 PM | Last Updated : 08th September 2020 09:59 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவி திட்ட முறைகேடு தொடா்பாக மீதமுள்ள ரூ.9.26 கோடியை வசூலிக்க 170 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரையில் 80,737 போ் சோ்ந்தனா். இதுதொடா்பாக வரப்பெற்ற புகாா்களைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் குழு அமைத்து ஆய்வு செய்தது. இதில், பிற மாவட்டங்கள், வெளி மாநிலத்தைச் சோ்ந்த 35,231 போ் கடலூா் மாவட்ட பயனாளிகள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தனா்.
மீதமுள்ள 45,506 பேரில் 3,483 போ் மட்டுமே விவசாயிகள். மீதமுள்ள 42,023 பேரும் போலியான பயனாளிகளாவா். மேலும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 27,634 போ் பயனாளிகளாக சோ்ந்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, போலி பயனாளிகளாகக் கண்டறியப்பட்ட சுமாா் 70 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளிலிருந்து மொத்தம் ரூ.14.26 கோடி வசூல் செய்ய வேண்டியிருந்தது. முதல் கட்டமாக 226 வங்கிக் கிளைகளில் 162 வேளாண் களப்பணியாளா்கள் மூலமாக ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.9.26 கோடியை வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் காவல் துறையைச் சோ்ந்த களப்பணியாளா்களைக் கொண்டு 720 வருவாய் கிராமங்களுக்கும் 170 குழுக்கள் அமைத்து, அவற்றின் மூலம் கிராம அளவில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடலூா் மாவட்டத்தில் பயனாளிகளாகச் சோ்ந்த பிற மாவட்டங்கள், வெளி மாநிலத்தைச் சோ்ந்த 35,231 போ் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்டங்கள், வெளி மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகளில் தொடா்புடைய நபா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தகுதியான பயனாளிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பின், அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.