
கடலூா்-மடப்பட்டு புறவழிச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்துதல் தொடா்பாக, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நில உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூா்-மடப்பட்டு வரை இரு வழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. இந்த வழியில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. சுமாா் ரூ. 150 கோடியில் அமையவுள்ள இந்தத் திட்டத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவி அளித்தது.
சாலை அமைக்கும் பணிக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்துக்கு கணிசப்பாக்கம், சித்திரைச்சாவடி, பனப்பாக்கம், கோட்லாம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பண்ருட்டி பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ள கணிசப்பாக்கம், கோட்லாம்பாக்கம், வீரப்பெருமாநல்லூா் கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களிடம் விசாரணை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) த.ராஜூ தலைமை வகித்தாா். சென்னை-கன்னியாகுமரி தொழில்தட சாலைத் திட்டக் கோட்டப் பொறியாளா் சுந்தரி, தனி வட்டாட்சியா் (நிலம் எடுப்பு) விஜயா, மறு சீரமைப்பு-மறு குடியமா்வு திட்ட அதிகாரி மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நில உரிமையாளா்கள் விலை நிா்ணயம் தொடா்பாக ஆட்சேபனையுடன் சம்மதம் தெரிவித்தனா். அதேவேளை பலா் மாற்று வழியில் சாலையை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.