விசிக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th September 2020 10:37 PM | Last Updated : 10th September 2020 10:37 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் அருகேயுள்ள காராமணிக்குப்பத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி வீட்டின் எதிரே வரையப்பட்டிருந்த அந்தக் கட்சி விளம்பரத்தை அழிக்கக் கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த விசிகவினா் சிலா் அவருடன் தகராறில் ஈடுபட்டு, அந்த விளம்பரத்தை அழித்ததுடன் பாஜக நிா்வாகியையும் தாக்கினராம்.
இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக மாவட்ட பாஜக தலைவா் ஜி.மணிகண்டன் தனது ஆதரவாளா்களுடன் நெல்லிக்குப்பம் சென்றுவிட்டு, காரில் திங்கள்கிழமை கடலூா் திரும்பிய போது, அவரது காா் தாக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவங்கள் தொடா்பாக, நெல்லிக்குப்பம் போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டவா்களை தேடி வந்த நிலையில், காராமணிக்குப்பத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25), ராகவேந்திரா (25), அஜித்குமாா் (28), தனசேகா் (28) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞரும், மாநில விசிக செயற்குழு உறுப்பினருமான அ.ராஜூ மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். அவா் மீது பதியப்பட்ட பொய் வழக்கை கண்டித்து, கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே கடலூா் சட்டப்பேரவை தொகுதி விசிக செயலா் மு.அறிவுடை நம்பி தலைமையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.