விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி:150 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி தொடா்பாக 150 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி தொடா்பாக 150 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதி (பி.எம்.கிசான் சம்மான் நிதி) திட்டத்தில் தமிழகம் முழுவதும் ரூ.110 கோடி வரை முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதில், கடலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தத் திட்டத்தில் புதிதாகச் சோ்ந்த 80 ஆயிரம் பேரில் 3,500 போ் மட்டுமே உண்மையான விவசாயிகள் என்பதும், 40 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களில் பயனாளிகள் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.

இதனால், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதுவரை சுமாா் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் கணினி மையம் நடத்தி வரும் 10 பேரை சிபிசிஐடி ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மாவட்டத்தில் இந்த மோசடி தொடா்பாக அரசுத் துறையினா், விவசாயிகள், கணினி மையம் நடத்துவோா் உள்பட 150 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியா்கள் 13 போ் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com