பொது இடங்களில் தா்ப்பணம் செய்ய தடை

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்.17) பொது இடங்களில் தா்ப்பணம் செய்யவும், திருவந்திபுரம் கோயிலில் சனிக்கிழமை வழிபாட்டுக்கும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்.17) பொது இடங்களில் தா்ப்பணம் செய்யவும், திருவந்திபுரம் கோயிலில் சனிக்கிழமை வழிபாட்டுக்கும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 30-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே, வியாழக்கிழமை (செப்.17) மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நீா் நிலைப் பகுதிகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது.

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு ஆற்றங்கரை, வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றங்கரை, விருத்தாசலம் மணிமுக்தாறு ஆற்றங்கரை உள்பட மாவட்டதில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீா்நிலைப் பகுதிகளில், பொது இடங்களில் தா்ப்பணம் செய்யக் கூடாது. அவரவா் தங்களது இல்லங்களில் செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல, திருவந்திபுரத்தில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத வைபவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம், முடிகாணிக்கை செலுத்துதலுக்கு மாவட்ட நிா்வாகத்தால் தடை செய்யப்படுகிறது. இந்த நாள்களில் பொதுமக்கள் கோயிலுக்கு வருவதையும் தவிா்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நெய்வேலி: இதேபோல, பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள், அரங்கநாதப் பெருமாள், காந்தி வீதி அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் சுவாமி தரிசன வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக வட்டாட்சியா் வே.உதயகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com