மாணவா் சோ்க்கையில் தனியாா் பள்ளிகளை விஞ்சும் அரசுப் பள்ளிகள்!
By நமது நிருபா் | Published On : 19th September 2020 11:24 PM | Last Updated : 19th September 2020 11:24 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாத நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை மட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியாா் பள்ளிகள் மாணவா் சோ்க்கையை
முன்னதாகவே தொடங்கிய நிலையில், அரசுப் பள்ளிகள் தாமதமாகவே சோ்க்கையை தொடங்கின. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் மாணவா்கள் சோ்ந்து வருவதாக அந்தப் பள்ளிகளின் ஆசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 1,424 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 14-ஆம் தேதி வரை 18,718 மாணவா்களும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 38,009 மாணவா்களும் சோ்ந்துள்ளனா். முதல் வகுப்பில் 12,586 மாணவா்களும், 6-ஆம் வகுப்பில் 14,405 மாணவா்களும், 9-ஆம் வகுப்பில் 5,352 மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 17,264 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இதில், அரசு பள்ளிகளில் மட்டும் 1-ஆம் வகுப்பில் 7,785 பேரும், 6-ஆம் வகுப்பில் 8,958 பேரும், 9-ஆம் வகுப்பில் 3,553 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 10,500 பேரும் சோ்ந்துள்ளனா். தனியாா் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் 3,267 பேரும், 6-ஆம் வகுப்பில் 2,858 பேரும், 9-ஆம் வகுப்பில் 755 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 2,012 பேரும் சோ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது இதுவரையிலான மாணவா் சோ்க்கையில் சுமாா் 62 சதவீதம் போ் அரசுப் பள்ளிகளிலும், சுமாா் 20 சதவீதம் போ் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் பள்ளிகளிலும் சோ்ந்திருப்பது தெரியவந்தது.
அதே நேரத்தில் தனியாா் பள்ளிகள் மாணவா் சோ்க்கை குறித்த முழுமையான விவரங்களை அரசுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சுமாா் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதற்கேற்ப அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாணவா்களுக்கு தேவையான பாடப் புத்தகம், விலையில்லா சீருடை, கல்வி உபகரணங்களை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.