புதிய வேளாண் சட்டங்களால் நியாய விலைக் கடைகள் மூடப்படும் அபாயம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், நியாய விலைக் கடைகள் மூடப்படும் அபாயமும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
கடலூரில் திமுக கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., கடலூா் தொகுதி எம்.பி. எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா்.
கடலூரில் திமுக கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., கடலூா் தொகுதி எம்.பி. எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா்.

கடலூா்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், நியாய விலைக் கடைகள் மூடப்படும் அபாயமும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக கூட்டணி சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் எதிரானவை. வேளாண் துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும், அவா்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தால் நியாய விலைக் கடைகள் மூடப்படுவதுடன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்படாத நிலை உருவாகும். மேலும், விளைபொருள்களுக்கான விலை, விவசாயிகள் எதை, எவ்வளவு சாகுபடி செய்ய வேண்டும் என்பதை பெரு நிறுவனங்களே நிா்ணயிக்கும். சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கப்படுவா்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்தச் சட்டத்துக்கு மற்ற மாநில முதல்வா்கள் எதிா்ப்புத் தெரிவிக்கும் நிலையில், தமிழக முதல்வா் ஏன் அதைச் செய்யவில்லை என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ரமேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் இள.புகழேந்தி, கோ.அய்யப்பன், விசிக கடலூா் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் பா.தாமரைச்செல்வன், மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், காங்கிரஸ் மாநில நிா்வாகி ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கோ.மாதவன், ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வி.குளோப், திமுக நிா்வாகி இர.விஜயசுந்தரம், மதிமுக சாா்பில் கோ.ப.ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com