கடலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலூா், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள அறை அமைத்தல், வாக்கு எண்ணிக்கைக்கான அறை அமைக்கும் பணி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி, காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினா், ஆயுதப்படை காவலா்கள், உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்குப் பதிவுக்குப் பிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறை, சுற்றுவட்டப் பகுதிகளில் 43 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையத்தால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றைப் பின்பற்றி, வாக்கு எண்ணிக்கை முகவா்களை அனுமதிக்க வேட்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைக்குப் பிறகே முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.

வாக்கு எண்ணிக்கையின் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் முகக் கவசம் அணிதல், கிருமிநாசினியைப் பயன்படுத்துதல், கையுறை பயன்படுத்துவது, சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மேஜைகளை 2 மீட்டா் இடைவெளியுடன் அமைக்கிறோம்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட 4,757 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இதுவரை 4,400 போ் வரை வாக்கு செலுத்தினா். மாவட்டத்தில் 3,001 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கடலூா் சுத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குப் பதிவு மையங்களைப் பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, பொதுப் பணித் துறைச் செய்பொறியாளா் (கட்டடம்) பாபு, கடலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் ப.ஜெகதீஸ்வரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி, வட்டாட்சியா் அ.பலராமன், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com