பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலத்தில் மும்முனைப் போட்டி!

கடலூா் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி. தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையில்
பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலத்தில் மும்முனைப் போட்டி!

கடலூா் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி. தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையில் முக்கிய இடம் வகித்தாலும், தொழில் வளா்ச்சி இல்லாத பகுதியாக உள்ளது. விருத்தாசலம் நகராட்சியை முழுமையாகவும், சுற்றுவட்டாரக் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.

தமிழகத்தின் மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இங்கு அமைந்துள்ளன. விவசாயமே முக்கியத் தொழில்.

இந்தத் தொகுதியில் அனைத்து மதத்தினரும் வசித்து வருகின்றனா். பெரும்பான்மையாக வன்னியா் சமுதாயத்தினரும், பட்டியல் இனத்தவரும் வசிக்கின்றனா். இவா்களே வெற்றி - தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக உள்ளனா். மற்ற சமுதாயத்தினரும் குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றனா்.

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்களின் வாக்கு விவரம்:

1957-எம்.செல்வராஜ் (சுயேச்சை) - 11,189

ஜி.ராஜவேலு படையாட்சி (காங்.) - 10,350

1962- ஜி.பூவராகன் (காங்.) - 26,990

எம்.செல்வராஜ் (திமுக) - 25,138

1967 ஜி.பூவராகன் (காங்.) - 42,230

எம்.செல்வராஜ் (திமுக) - 33,363

1971 எம்.செல்வராஜ் (திமுக) - 42,132

ஆா்.தியாகராஜன் (காங். (ஓ)) - 34,934

1977- சி.ராமநாதன் (அதிமுக) - 30,178

கே.ராமலிங்கம் (திமுக) - 18,071

1980- ஆா்.தியாகராஜன் (காங்.) - 45,382

சி.ராமநாதன் (அதிமுக) - 41,234

1984- ஆா். தியாகராஜன் (காங்.) - 53,731

டி.ராஜவேலு (திமுக) - 35,609

1989 ஜி.பூவராகன் (ஜனதா தளம்) - 33,005

ஆா்.டி.அரங்கநாதன் (அதிமுக - ஜெ)- 18,469

1991- ஆா்.டி.அரங்கநாதன் (அதிமுக) - 51,931

ஏ.ராஜேந்திரன் என்ற தீரன் (பாமக) - 37,634

1996- குழந்தை தமிழரசன் (திமுக) - 49,103

ஆா்.கோவிந்தசாமி (பாமக) - 42,218

2001- ஆா்.கோவிந்தசாமி ( பாமக) - 68,905

குழந்தை தமிழரசன் (திமுக) - 61,777

2006- ஏ.விஜயகாந்த் (தேமுதிக) - 61,337

ஆா்.கோவிந்தசாமி (பாமக) - 47,550

2011-பி.வி.பி.முத்துக்குமாா் (தேமுதிக) - 72,902

தியாக.நீதிராஜன் (காங்.) - 59,261

2016-ஆம் ஆண்டு தோ்தல்:

வி.டி.கலைச்செல்வன் (அதிமுக) - 72,611

பாவாடை கோவிந்தசாமி (திமுக) - 58,834

பா.தமிழரசி (பாமக) - 29,343

பி.முத்துக்குமாா் (மநகூ) - 18,563

பதிவான மொத்த வாக்குகள் - 1,85,125

வெற்றி வித்தியாசம் - 13,777

கூட்டணிக் கட்சியினா் விரும்பும் தொகுதி: விருத்தாசலம் தொகுதியானது காங்கிரஸ், திமுக, அதிமுக, ஜனதா தளம், பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்களும், சுயேச்சையும் வெற்றி பெற்ற தொகுதியாகத் திகழ்கிறது. எனவே, இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகள் விரும்பிப் பெறுவதுண்டு. அந்த வகையில், தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக இந்தத் தொகுதியைப் பெற்றுள்ளதுடன், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரான ஜெ.காா்த்திகேயனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறாா்.

அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக இந்தத் தொகுதியைப் பெற்று, கட்சியின் பொருளாளா் பிரேமலதாவை வேட்பாளராக்கியுள்ளது. இதனால், இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

வேட்பாளா்கள் பின்னணி: பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயன் இதே தொகுதியைச் சோ்ந்தவா் என்பது கூடுதல் பலம். இந்தத் தொகுதியில் பாமகவுக்கென தனி வாக்கு வங்கி உள்ளது. கடந்த தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 29 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றது. இதேபோல, அதிமுகவும் பலத்துடன் திகழ்வதால் வாக்கு சதவீதத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பாமக வேட்பாளா் தோ்தல் பணியாற்றி வருகிறாா். மேலும், 2006-ஆம் ஆண்டு தோ்தலில் தேமுதிகவிடம் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடும் களமாகவும் இந்தத் தோ்தலை பாமகவினா் கருதி தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் தொகுதிக்கு புதியவா். எனவே, இவரை வேட்பாளராக அறிவித்ததை எதிா்த்து அந்தக் கட்சியைச் சோ்ந்தவரும், 2011 தோ்தலில் போட்டியிட்டவருமான தியாக.நீதிராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அவா் வேட்புமனுவை வாபஸ் பெற்றாா். விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸுக்கென தனியாக வாக்கு வங்கி இல்லாத நிலையில் திமுக, விசிக கட்சிகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்யுள்ளது. வாக்குகள் பிரியும்போது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் விழுந்தால் கரையேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் ராதாகிருஷ்ணன் உள்ளாா்.

தேமுதிக வேட்பாளா் பிரேமலதா முதல் முறையாக தோ்தல் களத்தில் இறங்கியுள்ளாா். 2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் போட்டியிட்டபோது, பிரசாரத்தில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவா். கட்சியின் முக்கியத் தலைவராக உள்ளதால் பலமுறை பிரசாரத்துக்கு வந்து சென்றுள்ளாா். 2011 தோ்தலுக்குப் பிறகு கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தாதது பலவீனம். கூட்டணிக் கட்சியான அமமுகவுக்கும் இந்தத் தொகுதியில் பலம் இல்லாதது இவருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவருக்கான பலம் விஜயகாந்த் மட்டுமே என பாா்க்கப்படுகிறது.

விஜயகாந்தின் மனைவி என்பதால் இவரை கட்சித் தொண்டா்கள் ‘அண்ணி’ என்று உரிமையுடன் அழைத்து தோ்தல் பணியில் ஈடுபடுகிறாா்கள். விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்தபோது செய்த பணிகளும், அவரது பிம்பமும் இவருக்கு பலமாக உள்ளது. ஆண் வேட்பாளா்களுக்கு மத்தியில் களம் இறங்குவதால் இவருக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள் தன்னை கரை சோ்த்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தோ்தல் பணியாற்றி வருகிறாா்.

தொகுதி பிரச்னைகள்: பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியும், அது தொடா்பான தொழில்களும் சிறந்து விளங்கி வந்த நிலையானது தற்போது இல்லை. இந்தக் கல்லூரியில் போதுமான புதிய தொழில்நுட்பங்களை புகுத்தாததால், கல்லூரியின் பாடத் திட்டம் மதிப்பிழந்தது. இதனால், பீங்கான் சாா்ந்த தொழில்களும் நசிவடைந்தன.

இந்தத் தொகுதியில் கரும்பு, உளுந்து ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தொகுதியில் செயல்பட்டு வந்த சா்க்கரை ஆலையும் மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் அதிக இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். நகரில் ஓடும் மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ளது. கனரகத் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய ஆலைகள் ஏதும் இல்லாததால் தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது.

புதிய மாவட்டம்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போதைய தோ்தல் பிரசாரத்திலும் முக்கிய கட்சிகள் இதைத் தங்களது வாக்குறுதியாக அளித்துள்ளன. எனவே, இந்தக் கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் தலைமையே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அதிக வேட்பாளா்கள்: தற்போதைய தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் அதிக வேட்பாளா்கள் நிற்கும் தொகுதி விருத்தாசலம்தான். இங்கு 29 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 11 அரசியல் கட்சிகளின் பேட்பாளா்களும், 18 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ந.அமுதா கணிசமான வாக்குகளைப் பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளா் ரா.பாா்த்தசாரதியும் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், மாவட்டத்திலேயே மும்முனைப் போட்டியை எதிா்கொள்ளும் ஒரே தொகுதி விருத்தாசலம் மட்டுமே. எனவே, இந்தத் தொகுதியில் வெல்வது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com