தொழிலாளா் பற்றாக்குறை: மணிலா அறுவடை பாதிப்பு

தொழிலாளா் பற்றாக்குறை: மணிலா அறுவடை பாதிப்பு

நெய்வேலி: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளுக்கு கூலித் தொழிலாளா்கள் அதிகளவில் அழைத்துச் செல்லப்படுவதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு மணிலா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 2,500 ஹெக்டோ் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் விளையும் மணிலாக்கள் எண்ணெய் பிழிதிறன் அதிகம் கொண்டது. இதனால், குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மணிலா சந்தைக்கு பெயா் பெற்றது.

நிகழாண்டு காா்த்திகை பட்டத்தில் விவசாயிகள் மணிலா விதைப்பு செய்தனா். சராசரி அளவைவிட பருவமழை அதிகளவிலும், சீராகவும் பெய்ததால் மணிலா செடிகள் செழித்து வளா்ந்தன. கடந்த ஒருமாத காலமாக மணிலா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமாா் 75 சதவீத அறுவடைப் பணி முடிந்துவிட்டது.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் சூடுபிடித்துள்ளதால், பிரசார நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சோ்க்க

விவசாய கூலித் தொழிலாளா்கள் அதிகளவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதனால், மணிலா அறுவடைப் பணிக்கு ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில தொழிலாளா்களை கொண்டு மணிலா செடிகளை பறித்து, இயந்திரம் மூலம் மணிலாவை பிரித்தெடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 2,500 ஹெக்டா் பரப்பளவில் மணிலா பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வயல்களில் அறுவடை முடிந்து விட்டது. தற்போது, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கட்சியினா் பிரசாரத்துக்கு அதிகளவில் ஆள்களை அழைத்துச் செல்வதால் மணிலா அறுவடைக்கு யாரும் வருவதில்லை. நிலத்தில் பறித்த செடிகளில் உள்ள மணிலாவை இயந்திரம் மூலம் பிரித்தெடுத்து வருகிறோம். இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,400 வரை வாடகை பெறுகின்றனா். தேவை அதிகம் என்பதால் மணிலா அறுவடை இயந்திரம் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com