முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
வாக்குச் சாவடி மையங்களுக்கு அச்சுறுத்தல்: நடவடிக்கை எடுக்காவிடில் உண்ணாவிரதம்: பாமக வேட்பாளா் கோ.ஜெகன்
By DIN | Published On : 04th April 2021 12:16 AM | Last Updated : 04th April 2021 12:16 AM | அ+அ அ- |

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா், சொரத்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்குச் சாவடி மையங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதன் மீது மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணவிரதத்தில் ஈடுபடுவேன் என பாமக வேட்பாளா் கோ.ஜெகன் தெரிவித்தாா்.
வடக்குத்து கிராமத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா், புலியூா்காட்டு சாகை, சொரத்தூா், வரிசாங்குப்பம் உள்ளிட்ட 13 வாக்கு சாவடி மையங்களை குறிப்பிட்ட சிலா் கைப்பற்றி போலி வாக்குப் பதிவு செய்யப்போவதாக அச்சுறுத்தி வருகின்றனா். அந்தப் பகுதி வாக்காளா்களின் பயத்தை நீக்கி, ஜனநாயக ரீதியில் வாக்களிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் ஏற்பாடு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமைதி வழியில் மகாத்மா காந்தி சிலை எதிரே கூட்டணிக் கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
நான் வெற்றி பெற்றால் நெய்வேலி வட்டம் 21, 29, 30-இல் வசிக்கும் வாக்காளா்களின் கோரிக்கைகள், என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா் பிரச்னைகள், நெய்வேலி நகரிய வணிகா்களின் வாடகை விவகாரம் குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயரதிகாரிகளிடம் பேசி தீா்வு காண்பேன்.
முந்திரி ஏற்றுமதி வணிக வளாகம், பலா மதிப்புக் கூட்டு நிறுவனம் கொண்டு வரவும், வடக்குத்து ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றவும், மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு வட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.