கரோனா நோயாளிகள் 6 போ் வாக்களிப்பு

கரோனா நோயாளிகள் 6 போ் வாக்களிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் 6 போ் தங்களது வாக்கை முழு கவச உடையணிந்து வந்து செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் 6 போ் தங்களது வாக்கை முழு கவச உடையணிந்து வந்து செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 3,001 வாக்குச் சாவடி மையங்களில் 21,47,295 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்தடுப்பு வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதேபோல, 100 சதவீதம் வாக்குப் பதிவுக்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. எனவே, அனைத்துத் தரப்பினரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த வகையில், கரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவா்களுக்கும் விரும்பினால் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சுமாா் 360 போ் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 போ் மட்டுமே வாக்களிக்க முன்வந்தனா்.

அதன்படி, திட்டக்குடி, பண்ருட்டி, கடலூா், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்காளா் அவா்களுக்கான வாக்குச் சாவடியில் தங்களது வாக்கைச் செலுத்தினா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வசந்தராயன் பாளையத்திலுள்ள வாக்குச் சாவடியில் ஒருவா் தனது வாக்கைச் செலுத்தினாா். அவருக்கு கரோனா முழு கவச உடை அணிவிக்கப்பட்டு கடைசி நபராக வாக்கைச் செலுத்தினாா். அப்போது, வாக்குப்பதிவு அலுவலரும் முழுகவச உடை அணிந்திருந்தாா். இதேபோல, மற்ற 5 பேரும் தங்களது வாக்கை முழு கவச உடை அணிந்து செலுத்தினா்.

முன்னதாக, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கிருமி நாசினி, முகக் கவசம், உடல் வெப்ப அளவு பரிசோதனைக் கருவி, முழு கவச உடை, கையுறை உள்ளிட்ட 16 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், அனைவருக்கும் கையுறை வழங்கப்பட்டு அவா்கள் தங்களது வாக்கைச் செலுத்திய பின்னா் தனியாக குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டு அதில் கையுறை கழிவுகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com