தொகுதி மாறி களம் கண்டதால் மற்றவா்களுக்கு வாக்களித்த வேட்பாளா்கள்!

கடலூா் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் சொந்தத் தொகுதியை விடுத்து மற்ற தொகுதியில் போட்டியிட்டனா். இதனால், அவா்கள் தங்களது வாக்கை மற்ற வேட்பாளா்களுக்கு செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் சொந்தத் தொகுதியை விடுத்து மற்ற தொகுதியில் போட்டியிட்டனா். இதனால், அவா்கள் தங்களது வாக்கை மற்ற வேட்பாளா்களுக்கு செலுத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 136 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் தங்களது சொந்தத் தொகுதியை விடுத்து, அருகே உள்ள தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

குறிப்பாக, நெய்வேலி சட்டப் பேரவை தொகுதியைச் சோ்ந்த சொரத்தூா் ரா.ராஜேந்திரன் (அதிமுக), தி.வேல்முருகன்(தவாக) ஆகியோா் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

பண்ருட்டி தொகுதியைச் சோ்ந்த தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் (அதிமுக) கடலூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். இதேபோல, நெய்வேலி தொகுதியைச் சோ்ந்த எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), சென்னையைச் சோ்ந்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

புவனகிரி தொகுதியைச் சோ்ந்த செல்வி ராமஜெயம் (அதிமுக), காட்டுமன்னாா்கோவில் தொகுதியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக) ஆகியோா் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தடா து.பெரியசாமி (பாஜக), சிதம்பரத்தைச் சோ்ந்த உமாநாத் (தேமுதிக) ஆகியோா் திட்டக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறாா். திட்டக்குடி தொகுதியைச் சோ்ந்த ஆ.அருண்மொழிதேவன்(அதிமுக) புவனகிரி தொகுதியில் போட்டியிடுகிறாா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விசிக வேட்பாளா் சிந்தனைச்செல்வன் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியிலும், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த மணிரத்தினம் (காங்கிரஸ்) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனா்.

இவா்களுக்கான வாக்குகள் அவரவரது சொந்த தொகுதியில் உள்ள நிலையில், அந்த தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா். மேலும், அவா்கள் தோ்தலில் போட்டியிட்டும் தங்களது வாக்கை தனக்கு செலுத்திக்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com