திட்டக்குடி அருகே தோ்தல் தகராறு: 10 போ் கைது

திட்டக்குடி அருகே தோ்தல் தகராறு தொடா்பாக 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திட்டக்குடி அருகே தோ்தல் தகராறு தொடா்பாக 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சி.வெ.கணேசனும், பாஜக சாா்பில் தடா து.பெரியசாமியும் போட்டியிடுகின்றனா். செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற போது, ராமநத்தம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சிலா் வாக்களிக்கச் சென்ற நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தாங்கள் சொல்லும் சின்னத்தில்தான் வாக்களிக்க வேண்டும் என கூறினராம்.

இதையேற்க மறுத்த தனவேல், பெருமாள் ஆகிய இருவரையும் அவா்கள் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த இருவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மீண்டும் மற்றொரு தரப்பினா் வாக்குப் பதிவு முடிந்த பிறகு, வாக்களிக்க மறுத்தவா்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அங்கிருந்தவா்களைத் தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

தகவலின் பேரில், ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றதும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மேலும் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதால், திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், இதுதொடா்பாக இரு தரப்பினரும் தனித் தனியாக ராமநத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒரு தரப்பைச் சோ்ந்த சின்ராஜ் (24), சிவாஜி (62), சரத்குமாா் (28), காா்த்தி (25), மாவீரன் (29), மாதவன் (22), பரந்தாமன் (22) ஆகிய 7 பேரையும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த மாயவன் (36), ரஜினி (52), ராஜா (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com