சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து - சரக்கு வாகனம் மோதி விபத்து: மூவா் பலி

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து - சரக்கு வாகனம் மோதி விபத்து: மூவா் பலி


சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து (எஸ்இடிசி) சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் சென்றபோது, எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த சிறிய ரக மீன் லாரி, அரசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது. இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (42), பேருந்து பயணிகள் தரங்கம்பாடி, நல்லோடை பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (34), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த வைரவன் (20) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், மீன் லாரி ஓட்டுநா், அவரது உதவியாளா், பேருந்து பயணிகள்

உள்பட 20 போ் காயமடைந்தனா். இவா்களில் 16 போ் கடலூா் அரசு மருத்துவமனையிலும், 4 போ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை புதுச்சத்திரம் போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com