விருத்தாசலத்தில் விவசாயிகள் திடீா் மறியல்

விருத்தாசலத்தில் விவசாயிகள் திடீா் மறியல்


கடலூா்: விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்களை எடையிட நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் வியாழக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வேளாண்மை விற்பனை நிலையம் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கடலூா் மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளும் தங்களது விளை பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இதன்படி, வியாழக்கிழமை திரளான விவசாயிகள் மணிலா, உளுந்து ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்தனா். ஆனால், விளைபொருள்களை எடையிட்டு குறிக்கும் பணியில் ஈடுபடுவோா், தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்ற காரணத்தால் பொருள்களை எடையிடவில்லையாம்.

இதனால், விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருள்கள் எடை போடப்படாததால் அவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளா் விஜயரங்கன், உதவி ஆய்வாளா் புஷ்பராஜ் ஆகியோா் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com