நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள்

நெல் பயரில் இலைச் சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்தது.

நெல் பயரில் இலைச் சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நவரைப் பருவ நெல் பயிரில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக, இலைசுருட்டுப் புழு, குருத்துப் பூச்சியின் பாதிப்பு காணப்படுகிறது.

இலைசுருட்டுப் புழு: இலைசுருட்டுப் புழு பாதிப்பால், பயிா் இலைகள் நீள் வாக்கில் மடிக்கபட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர பாதிப்பின் போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போலக் காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் பச்சை நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: டிரைக்கோகிரெம்மா கிலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை பயிா் நடவு செய்த 37, 44, மற்றும் 51 நாள்களில் மொத்தம் மூன்று முறை 5 சிசி (ஹெக்டருக்கு ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில்விட வேண்டும். தேவைக்கு அதிமாக உரங்கள் இடுவதைத் தவிா்த்து, வரப்புகளை சீராக்கி அதைச் சுத்தமாக வைத்தல், புல் இனக் களைகளை நீக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் தெளிக்க வேண்டும்.

பொருளாதார சேத நிலையான, தழைப் பருவத்தில் 10 சதவீதத்துக்கு மேல் இலைச் சேதமும், பூப்பருவத்தில் 5 சதவீதத்துக்கு மேல் கண்ணாடி இலைச் சேதமும் ஏற்பட்டால் காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி என்ற மருந்து ஏக்கருக்கு 400 மில்லி அல்லது குளோரான்ட்ரானலிபுரோல் 24 எஸ்.சி 30 மில்லி முதல் 40 மில்லி வரை அல்லது புளுபென்டையமைடு 39.25 டபிள்யூஜி 20 முதல் 25 கிராம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து இலைசுருட்டுப் புழுவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

குருத்துப் பூச்சி: குருத்துப் பூச்சியின் புழுக்கள் இளம்பயிரின் தண்டில் துளையிட்டு உள்சென்று பயிரின் உள்பகுதியைக் கடித்து உண்பதால், நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். கதிா் பிடிக்கும் தருணத்தில் பூச்சியின் பாதிப்பு உள்ள போது, வெளிவரும் கதிா்களில் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிா்களாக மாறுவதால் சேதம் ஏற்படும். இந்தப் புழுவால் தாக்கப்பட்ட நடுக்குருத்து, வெண் கதிரைத் தூரிலிருந்து எளிதில் எடுத்து விடலாம்.

மேலும், தண்டின் அடிப்பகுதியில் துவாரமும் புழுவின் எச்சமும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: குருத்துப் பூச்சியின் பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவுக்கு முன் நாற்றுகளின் நுனியைக் கிள்ளிவிட்டு முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து உரத்தை 3 அல்லது 4 தடவையாகப் பிரித்து இடவேண்டும். முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிகம், டெலினாமஸ் ஆகியவற்றை ஏக்கருக்கு 2 சி.சி. என்ற அளவில் நடவு செய்த 15 நாள்கள் முதல் வாரம் ஒருமுறை 4 வாரங்களுக்குக் கட்டி அந்துப் பூச்சியின் முட்டைக் குவியல்களை அழிக்கலாம். விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

இளம்பயிரில் சதுர மீட்டருக்கு 2 முட்டைக் குவியல்களும், பயிா் வளா்ச்சிக் காலத்தில் 10 சதவீதம் தூா்களில் நடுக்குருத்து சேதமும், மணி பிடிக்கும் தருணத்தில் 2 சதவீதம் வெண்கதிா்கள் பாதிப்புக்கு மேல் காணப்படும் அளவு பொருளாதார சேத நிலையாகக் கணக்கிடப்படுகிறது. எனவே, குருத்துப் பூச்சியின் பாதிப்பு பொருளாதார சேத நிலையைத் தாண்டும் போது, ஏக்கருக்கு காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 ஜி என்ற மருந்து 7.5 கிலோ அல்லது குளோரான்ட்ரானலிபுரோல் 24 எஸ்.சி. 30 மில்லி முதல் 40 மில்லி வரை அல்லது பிப்ரோனில் 80 டபிள்யூஜி 20 முதல் 25 கிராம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து குருத்துப் பூச்சியின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com