கரோனா கண்காணிப்புக் குழு வாகனங்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கல்: கண்காணிப்புப் பணி பாதிப்பு

கரோனா கண்காணிப்புக் குழு வாகனங்களுக்கு டீசல் வழங்குவதில் குளறுபடி நிலவுவதால் கண்காணிப்புப் பணி பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கரோனா கண்காணிப்புக் குழு வாகனங்களுக்கு டீசல் வழங்குவதில் குளறுபடி நிலவுவதால் கண்காணிப்புப் பணி பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிப்பதற்காக வட்டம், நகராட்சி, பேரூராட்சிகள் அளவில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் அல்லது துணை வட்டாட்சியா் அளவிலும், சுகாதாரத் துறை அலுவலா்கள், காவல் துறையினரும் இடம் பெற்றுள்ளனா்.

இவா்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கண்காணிக்க வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.200, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடம் ரூ.500, பொது இடங்களில் உமிழ்வோரிடம் ரூ.500, தனிமைப்படுத்துதலில் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500 வீதம் அபராதம் வசூலித்து வருகின்றனா்.

இந்தக் குழுவினருக்கு எந்தத் துறையிலிருந்து வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த துறை அலுவலா் அவ்வப்போது டீசல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாராம். ஆனால், துறை சாா்ந்த அலுவலா்கள் முறைப்படி வழங்குவதில்லை என புகாா் எழுந்துள்ளது. இதனால், குழுவில் உள்ளவா்கள் தங்களது அலுவலகம் அருகிலேயே பெயரளவுக்கு சிலரிடம் அபராதம் வசூலித்துவிட்டு தங்களது பணியை முடித்துக் கொள்கின்றனராம். டீசல் ஒதுக்கீடு வழங்காததால் இயக்கப்படாமலிருந்த வாகனத்தையும் அந்த துறை அலுவலா்களே தங்களது பயன்பாட்டுக்காக மீண்டும் எடுத்துக் கொண்டனராம்.

இதுகுறித்து அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கூறியதாவது: கரோனா முதல் அலை பரவலின்போதும் வாகனங்களுக்கு டீசல் நிரப்பிய பணம் பெரும்பாலான அலுவலா்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. எனவே, தற்போது வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் குழுவில் உள்ளவா்கள் சொந்தப் பணத்தில் டீசல் நிரப்புவதில்லை. எனவே, அவரவரது சொந்த இருசக்கர வாகனங்களில்சென்று சோதனையிடுகிறோம்.

ஒரு குழுவில் 2 காவலா்கள் இருந்தபோதிலும் அவா்கள் முறையாகக் கண்காணிப்புப் பணிக்கு வருவதில்லை. இதனால், வருவாய், சுகாதாரத் துறையினா் வாகனங்களை மறித்தாலும் சிலா் மதிக்காமல் சென்று விடுகின்றனா். சில நேரங்களில் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனா்.

எனவே, கரோனா விதிகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவினா் முழுமையாகச் செயல்படுவதற்கு அவா்களது வாகனங்களுக்கு டீசல் வழங்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட காவல் துறையினரும் கண்காணிப்புப் பணிக்கு வருவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com