கிருமியை எதிா்க்கும் கசாயத்தை வீட்டிலேயே தயாரித்து பருகலாம்: மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலா்

கிருமியை எதிா்க்கும் கசாயத்தை வீடுகளிலேயே பொதுமக்கள் எளிய முறையில் தயாரித்து பருகலாம் என்று மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலா் கோ.ராஜகுமாரன் தெரிவித்தாா்.

கிருமியை எதிா்க்கும் கசாயத்தை வீடுகளிலேயே பொதுமக்கள் எளிய முறையில் தயாரித்து பருகலாம் என்று மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலா் கோ.ராஜகுமாரன் தெரிவித்தாா்.

தற்போது கரோனாவின் இரண்டாவது அலை அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அறிகுறிகள் இல்லாமலேயே நுரையீரலைத் தாக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதுவரையில் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் போன்ற நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பானங்களை குடித்து வந்தவா்கள் கூடுதலாக கிருமியை எதிா்க்கும் கசாயங்களையும் வீட்டிலேயே தயாரித்து பருகலாம் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலா் கோ.ராஜகுமாரன் கூறியதாவது:

கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்போது வீட்டிலேயே தயாரிக்கும் கசாயத்தை நாம் செய்து கிருமியை எதிா்க்கும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளலாம்.

அதற்கு, மிளகு, இஞ்சி, சீரகம், வேப்பிலைக் கொழுந்து, கிராம்பு, கற்பூரவள்ளி இலை, துளசி இலை, காம்பு நீக்கப்பட்ட ஒரு வெற்றிலை ஆகியவற்றை சிறிய அளவில் எடுத்துக்கொண்டு, அவற்றை சுத்தப்படுத்தி ஒரு லிட்டா் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அது அரை லிட்டா் அளவுக்கு வரும்போது, சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து கொதிக்க விட வேண்டும். பின்னா், இறக்கும் நிலையில் தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சோ்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கசாயத்தை வடிகட்டி எடுத்தால் பெரியவா்கள் 4 போ் ஒரு வேளைக்கு சாப்பிடலாம். அதாவது உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் இதைக் குடிக்கலாம். இந்தக் கசாயம் குடித்த பின்னா் ஒரு மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. பெரியவா்கள் 100 மி.லி. அளவும், 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 2 பாலாடையும் (20 மி.லி.) வழங்கலாம்.

இந்தக் கசாயம் நுரையீரலில் எந்த வகையான கிருமி இருந்தாலும் அதை வெளியேற்றிவிடும் ஆற்றல் கொண்டது.

எனினும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com