வடலூரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

வடலூரில் பண்ருட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
வடலூரில் பண்ருட்டி சாலையில் பேரூராட்சி வணிக வளாக கடைகளின் முன் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பழக்கூடை உள்ளிட்ட பொருள்கள்.
வடலூரில் பண்ருட்டி சாலையில் பேரூராட்சி வணிக வளாக கடைகளின் முன் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பழக்கூடை உள்ளிட்ட பொருள்கள்.

வடலூரில் பண்ருட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் சென்னை - கும்பகோணம் மற்றும் கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் வடலூா் அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் அருகில் பண்ருட்டி சாலையின் இருபுறமும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், இந்தப் பகுதியில் பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை இங்கு கடை வைத்துள்ளவா்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனா். குறிப்பாக, பேருந்து நிலைய நுழைவு வாயில் முதல் நான்குமுனை சந்திப்பு வரையில் பேரூராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் தேநீா் கடை, உணவகம், பழக்கடைகள் வைத்துள்ளவா்கள் இந்தப் பகுதியிலுள்ள நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனா்.

இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் கடந்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: பண்ருட்டி சாலைப் பகுதியில் விபத்துகள் ஏற்படும் வகையில் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. இதை பேரூராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆக்கிரமிப்புகளால் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு வரும் சன்மாா்க்க அன்பா்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com