வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள 43 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கைப் பணி நடைபெறவுள்ளது. ஓா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், 4 மேஜைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இந்தப் பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், பத்திரிகையாளா்கள் சுமாா் 3,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,631 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாற்று முகவா்களை நியமிக்க வேண்டும். அரசுப் பணியாளா்கள் எனில் ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்டு இருப்பில் உள்ள மாற்றுப் பணியாளரைப் பணியில் ஈடுபடுத்துவோம். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழையும் அனைவரும் கண்டிப்பாக கரோனா இல்லையென்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தற்போது தோ்தல் பாா்வையாளராக வெளிமாநிலத்திலிருந்து வந்துள்ள அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com