தரமற்ற கம்பு விதையால் விவசாயிகள் பாதிப்பு!

கடலூா் மாவட்டத்தில் தரமற்ற கம்பு விதையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் தரமற்ற கம்பு விதையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கடலூா் மாவட்டத்தில் பாசன வசதிக்கேற்ப அனைத்து வகைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. எள் அறுவடைக்குப் பிறகு கம்பு சாகுபடி செய்வது வழக்கம். குறுகிய கால வயதுடைய கம்பு சாகுபடி செய்தால் காா்த்திகை மாதம் மணிலா சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும்.

இதன்படி, பண்ருட்டி, வடலூா், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பில் விவசாயிகள் தற்போது கம்பு விதைத்துள்ளனா். இதில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் கம்பு விதைகள் முளைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

மூன்று நிறுவனங்களின் கம்பு விதைகளை விவசாயிகள் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விதைத்துள்ளனா். அதில் 2 நிறுவனங்களின் விதைகள் நல்ல நிலையில் முளைத்துள்ளன. ஆனால், எஞ்சிய ஒரு நிறுவனத்தின் விதைகளை விதைத்த வயல்கள் அனைத்திலும் அவை முழுமையாக முளைக்கவில்லை. இதனால் குறிஞ்சிப்பாடி தெற்கு, வடக்கு, கருங்குழி, வெங்கடாம்பேட்டை, சின்னதானங்குப்பம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறையில் முறையிட்டும் விளை நிலங்களை ஆய்வு செய்ய மாவட்ட விதை ஆய்வாளா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக ஒரு சில கிராமங்களில் விவசாயிகள் விதை விற்பனையாளா்களிடம் பிரச்னை செய்ததால், அவா்களுக்கு கம்பு விதைகளின் விலைக்கு ஈடு செய்யும் விதமாக ரசாயன உரங்களை வழங்கியுள்ளனா்.

எனவே, முளைப்புத் திறன் இல்லாத கம்பு விதைகளை வாங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை அடையாளங்கண்டு, சம்பந்தப்பட்ட விதை நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com