குடிநீா்ப் பிரச்னை: சிப்காட் திட்ட அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 10th August 2021 12:21 AM | Last Updated : 10th August 2021 12:21 AM | அ+அ அ- |

கடலூா் சிப்காட் திட்ட அலுவலா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பல்வேறு கிராம மக்கள்.
கடலுாா்: குடிநீா்ப் பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததைக் கண்டித்து, கடலூா் சிப்காட் திட்ட அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், இதனால் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதையடுத்து, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம், வைரங்குப்பம், குடிகாடு, ஈச்சங்காடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண, சிப்காட் நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்ணாரப்பேட்டையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம் மற்றும் வைரங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிக்கான கண்ணாரபேட்டை ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீா் வராமல் தடைபட்டுள்ளதாம்.
இந்த நிலையில், சங்கொலிகுப்பம், செம்மங்குப்பம், சேடப்பாளையம், வைரங்குப்பம் கிராம மக்கள் சாா்பில் அரசுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிப்காட் திட்ட அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பி.சுகந்தி, எஸ்.தேவசேனா, பிரமுகா்கள் எம்.விஜயகுமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமையில் கிராம மக்கள் திட்ட அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். ஆனால், திட்ட அதிகாரி நண்பகல் 12 மணி வரைஅலுவலகத்துக்கு வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தடையின்றி குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தியும், திட்ட அதிகாரி பேச்சுவாா்த்தைக்கு வராததைக் கண்டித்தும் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.