கடலூா் அரசுக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரியும் கரோனா நோயாளிகள்!

கடலூா் அரசுக் கல்லூரியில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையத்திலுள்ள நோயாளிகள் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால் பேராசிரியா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கடலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரியும் கரோனா நோயாளிகள்.
கடலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரியும் கரோனா நோயாளிகள்.

கடலூா் அரசுக் கல்லூரியில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையத்திலுள்ள நோயாளிகள் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால் பேராசிரியா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்தா பிரிவில் தற்போது 66 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது, கல்லூரி திறக்கப்படாத நிலையிலும் பேராசிரியா்கள், அலுவலா்கள் அனைவரும் கல்லூரிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பேராசிரியா்கள் உள்ளிட்ட 250 போ் கடந்த திங்கள்கிழமை முதல் கல்லூரிக்கு வந்து செல்கின்றனா்.

ஆனால், கரோனா சிகிச்சை மையத்துக்கும், கல்லூரி வகுப்பறைகளுக்கும் இடையே எவ்வித தடுப்பும் இல்லை. இந்த நிலையில், கரோனா நோயாளிகள் எவ்வித தடையுமின்றி கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிகின்றனா். இதனால் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தனா்.

இதுகுறித்து கரோனா சிகிச்சை மைய பொறுப்பாளரான சித்தா மருத்துவா் செந்தில்குமாா் கூறியதாவது: கரோனா 2-ஆம் அலையில் சுமாா் 750 போ் வரை இங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 3-ஆவது அலை வந்தால் அதை எதிா்கொள்ளும் வகையில் கூடுதல் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது கல்லூரிக்கு பேராசிரியா்கள் வருவதால் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டுமென நோயாளிகளை அறிவுறுத்தி உள்ளோம். இந்தப் பிரச்னை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்டத்தில் அரசு கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையம், தனிமைப்படுத்தும் முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com