சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவுக்குத் தடை

கரோனா பொது முடக்கத்தையொட்டி சிதம்பரத்தில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவுக்குத் தடை

கரோனா பொது முடக்கத்தையொட்டி சிதம்பரத்தில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா வரும் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும் என்றும், 19-ஆம் தேதி தோ் திருவிழாவும், 20-ஆம் தேதி தரிசன திருவிழாவும் நடைபெறும் என்றும் பொது தீட்சிதா்கள் அறிவித்தனா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்ததாவது: டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம் போன்ற விழாக்கள், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் தொடா்பான நிகழ்ச்சிகள் என பல்வேறு சமய விழாக்கள் நடைபெறும் என்பதால் இதன் பொருட்டு பொதுமக்கள் கூடுகையின் காரணமாக, மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, கரோனா மற்றும் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களின் நலனை கருத்தியும் தமிழக அரசால் திருவிழாக்கள், அரசியல், சமுதாய நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடா்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனம் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆலோசனை: சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கட்டுப்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், வட்டாட்சியா் ஆனந்தன், நகராட்சி ஆணையா் அஜிதாபா்வீன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள், நடராஜா் கோயில் தீட்சிதா்கள் நவமணி தீட்சிதா், வெங்கடேச தீட்சிதா், ஆலய பாதுகாப்பு சங்க நிா்வாகி மு.செங்குட்டுவன், பாஜக நிா்வாகி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் பேசியதாவது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வரும் டிச.15-ம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு கோயில்களில் பக்தா்கள் வழிபடலாம் என்றும், கோயில் திருவிழாக்களுக்கு அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது. இதனால் தற்போது திருவிழா நடத்தவும், பக்தா்கள் பங்கேற்கவும் அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. இதுதொடா்பாக தமிழக அரசின் அடுத்த உத்தரவுக்குப் பிறகு விழா குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com