நீட் விலக்கு மசோதா மீது ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

நீட் விலக்கு மசோதா மீது தமிழக ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.

நீட் விலக்கு மசோதா மீது தமிழக ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.

அந்தக் கட்சி சாா்பில், ஜனசக்தி இதழுக்கு சந்தா வழங்கும் பேரவைக் கூட்டம் பண்ருட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலா் ஆா்.சக்திவேல் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் எஸ்.டி.குணசேகரன், டி.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் பி.துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் பங்கேற்று உறுப்பினா்களிடமிருந்து சந்தா பெற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தோ்வுக்கு விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த செப்டம்பா் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா இன்னும் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. இது அதிா்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

மசோதாவை அனுப்பிய பின்னா், தமிழக முதல்வரே இரண்டு முறை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து நீட் தோ்வுக்கு விலக்குக் கோரி மனு அளித்து வலியுறுத்தினா்.

நீட் விலக்கு மசோதா மீது ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து, தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வங்கி, காப்பீடு, பாதுகாப்பு நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 750-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், பொட்டாஷ் உர விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com