ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நேரடியாக உளுந்து கொள்முதல்
By DIN | Published On : 06th February 2021 07:59 AM | Last Updated : 06th February 2021 07:59 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரசால் நேரடியாக உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கடலூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில், 10,117 ஹெக்டரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு குவிண்டாலில் நிா்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இதர பொருள்களின் கலப்பு 0.10 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் இருக்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்படும். தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
எனவே, விவசாயிகள் உளுந்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக தங்களது விவரத்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலகத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்த பின்னா் அழைப்பு வரும் நாளில் விற்பனைக்கு கொண்டு வரலாம். கூடுதல் விவரங்களுக்கு விருத்தாசலம்- 04143-238258, பண்ருட்டி- 04142-242185, சேத்தியாதோப்பு- 95854 44340, குறிஞ்சிப்பாடி 97906 70513 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதற்கு முன்னா் விவசாயிகள் கொண்டு வரும் உளுந்துக்கு வியாபாரிகள் விலை நிா்ணயம் செய்வாா்கள். தற்போது அரசு நிா்ணயித்துள்ள ஆதரவு விலைக்கு உளுந்து விற்பனை செய்துகொள்ளும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.