சாலைப் பணிக்கு நிலம் கையகம்: விவசாயிகள் எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சாலைப் பணிக்கு நிலம் கையகம்: விவசாயிகள் எதிா்ப்பு


சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ளது வீரானந்தபுரம் கிராமம். இந்த கிராமம் வழியாக திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்தக் கிராமத்தில் வழித்தடத்தை தோ்வு செய்யும்போது சில பகுதிகளில் வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் வீரானந்தபுரம் கிராமத்துக்கு வந்தனா். அவா்கள், கையகப்படுத்தப்பட்ட நிலப் பரப்பில் இருந்த வீடுகளை இடித்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவா் கே.வி.இளங்கீரன் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். காவல் துறையினா் இளங்கீரனை தாக்கி, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், திடீரென நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளோம் என்றனா்.

காங்கிரஸ் கண்டனம்: காவல் துறையினரால் கே.வி.இளங்கீரன் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவா் கே.வி.இளங்கீரன் பொது நோக்கத்துக்காக செயல்பட்டபோது போலீஸாா் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராடும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com