நியாயவிலைக்கடை பணியாளர்கள் பிப்.23-ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்: கு.பாலசுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிப்.23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
கு.பாலசுப்பிரமணியன்.
கு.பாலசுப்பிரமணியன்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிப்.23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

சிதம்பரத்தில் அவர் வியாழக்கிழமை அன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலமாகவும், குடிமைப்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும் நியாயவிலைக்கடைகளை நடத்தி வருகிறது. கூட்டுறவுத்துறையில் 33 ஆயிரம் கடைகளும், 2 ஆயிரம் கடைகள் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நடத்தி வருகிறது. சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தில் பணியாற்றி வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு இணையாக கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் பணியாற்றி வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சங்கம் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மூன்று முறை ஊதியம் மாற்றம் செய்தும் கூட சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

ஆட்சிகள் மாறினாலும் ஒரே மாதிரியான நிலைப்பாடுதான் உள்ளது. ஊதிய மாற்றத்திற்காக ஒரு குழுவை அரசு அறிவித்தது. அந்த குழுவின் அறிக்கையும் 31-12-2020க்கும் முன்பே அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது. இதன் மீது கடந்த ஒன்றரை மாதங்களாக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த அறிக்கையின் மீது சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பணியாளர்களிடையே இந்த மாற்றத்தை அறிவிக்க வேண்டும். அதேபோல ஒய்வூதியம் தொடர்பான கோரிக்கையும் நிலுவையும் உள்ளது. அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு நடவடிக்கை இல்லை. எனவே நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. ஏற்கனவே அமலில் இருந்து வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடர்பான ஓய்வூதியமும் 99 சதவீத பணியாளர்களுக்கு கிடைக்கவில்லை.

ஏனென்றால் இவர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி தொகை சரியாக எந்த அலுவலத்திலும் கட்டப்படுவதில்லை. சட்டப்படியான நிர்வாகத்தினை கூட்டுறவுத்துறை செயல்படுத்தவதே இல்லை. 
இந்த 2 அறிக்கைகள் மீது தமிழகஅரசு சங்கங்களை அழைத்து பேசி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பல போராட்டங்களை நடத்தினோம். போராட்டங்களை மதிக்காத அரசு தமிழகத்தை ஆண்டு வருகிறது. போராடுபவர்களை தவிர மற்றவர்களை எல்லாம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்த அரசு. அரசுக்கு கீழ் பணியாற்றி கொண்டிருக்கிற சங்கங்களையின் பிரதிநிதிகளை அழைத்து பேச மறுத்து வருவது ஜனநாயக விரோத செயலாகும். எனவே விரைவில் எங்களது சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிர்வாக ரீதியாக பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் நடைமுறைப்படுத்தவில்லை. முறைகேடுகளின் மொத்த உருவமாக கூட்டுறவுத்துறை உள்ளதை எடுத்து காட்டுகிறது. எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எங்களது சங்கத்தை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும். பேட்டியின் போது தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத்தலைவர் துரை.சேகர், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.தங்கராசு. மாவட்ட துணைச்செயலாளர் நடராஜன், பொறுப்பாளர் எஸ்.யோகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com