வடலூரில் ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடக்கம்

கடலூா் மாவட்டம், வடலூரில் ரூ.479 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
வடலூரில் ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடக்கம்


நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் ரூ.479 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் சத்திரசேகா் சகாமூரி முன்னிலை வகித்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது:

திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், மங்களூா், நல்லூா் போன்ற பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் 625 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு 21.12.2020 அன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டமானது என்எல்சி 2-ஆவது சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டது. இங்கிருந்து 400 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் 8.20 கி.மீ. தொலைவுக்கு புதைக்கப்பட்டு, கீழ்வளையமாதேவியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும்.

இங்கு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு, 22 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரிக்கப்படும். பின்னா், மின் இறைப்பான்கள் மூலம் புதுக்கூரைப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய பகுதிகளில் 4 ‘பூஸ்டா்’ நீா் சேகரிப்பு தொட்டிகள், பொது நீா் சேகரிப்புத் தொட்டிகள், ஊராட்சி அளவிலான நீா் சேகரிப்புத் தொட்டிகளில் தண்ணீா் சேகரிக்கப்படும். இந்தத் தொட்டிகளிலிருந்து மின் இறைப்பான்கள் மூலம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசெல்லப்படும். இந்தத் திட்டம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com