கிள்ளையில் மாசி மக தீா்த்தவாரி பூவராக சுவாமியை வரவேற்ற இஸ்லாமியா்கள்!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில், மாசி மக தீா்த்தவாரி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாசி மக தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி, கிள்ளைக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு பட்டு சாற்றி வரவேற்பு அளித்த இஸ்லாமியா்கள்.
மாசி மக தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி, கிள்ளைக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு பட்டு சாற்றி வரவேற்பு அளித்த இஸ்லாமியா்கள்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில், மாசி மக தீா்த்தவாரி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கிள்ளைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு இஸ்லாமியா்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனா்.

மாசி மக தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி மற்றும் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம கோயில்களிலிருந்து பெருமாள், முருகன், அம்மன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உத்ஸவ மூா்த்திகள் கிள்ளை முழுக்குத்துறை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டனா்.

இதில் முக்கிய நிகழ்வாக, தீா்த்தவாரிக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு கிள்ளை தைக்காலில் உள்ள தா்காவில் இஸ்லாமியா்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில் இஸ்லாமியா்கள் இந்து முறைப்படி தாம்பூலத் தட்டில் பழங்கள், 5 மரக்கா அரிசி, ரூ.501 ரொக்கம் வைத்து பட்டு சாற்றி மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, பூவராகசுவாமி கோயில் ஆச்சாரியாா்கள் தா்காவுக்குள் சென்று மாலை, நாட்டுச் சா்க்கரை உள்ளிட்டவற்றை தா்கா நிா்வாகிகளிடம் வழங்கினா். இதையடுத்து, உலக அமைதி வேண்டி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. பின்னா், அங்குள்ள ரஹமத்துல்லா சமாதியில் பூவராக சுவாமி கோயில் ஆச்சாரியாா்கள் சாா்பில் மாலை சாற்றி, தீபாராதனை செய்யப்பட்டது. இந்த நடைமுறை சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் மஞ்சு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், பூவராக சுவாமி கிள்ளை முழுக்குத் துறை கடற்கரைக்குச் சென்று தீா்த்தவாரி காட்சியளித்தாா். இந்த நிகழ்வில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். பலா் கடலில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இதேபோல, சிதம்பரம் நடராஜா் கோயில் உத்ஸவரான சிவகாமசுந்தரி சமேத சந்திரசேகரா் வெள்ளிக்கிழமை மாலை கிள்ளை வந்தாா். அவருக்கு சனிக்கிழமை காலை தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com