நீதிமன்றப் பணிக்கு போலி நியமன ஆணை: 2 போ் கைது

நீதிமன்றப் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியதாக 2 பேரை கடலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ச.சத்யராஜ், த.செந்தில்குமாா்.
கைது செய்யப்பட்ட ச.சத்யராஜ், த.செந்தில்குமாா்.

நீதிமன்றப் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியதாக 2 பேரை கடலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பெரியசோழவல்லி பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனின் மகன் சத்தியதாஸ் (26). இவா் அண்மையில் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாா் மனு:

கடலூா் செல்லங்குப்பத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் சத்யராஜ் (30) என்பவருடன் எனக்கு நீண்ட நாள்களாகப் பழக்கம் இருந்தது. அப்போது அவா் தனக்கு நீதிபதிகளிடம் செல்வாக்கு உள்ளதாகவும், தற்போது நீதிமன்றப் பணிகளுக்கு ஆள் எடுப்பதாகவும், எனவே, பணம் வழங்கினால் பணியைப் பெறலாம் என்றும் கூறினாா். இதை நம்பி அவரிடம் பல தவணைகளில் ரூ.6.17 லட்சம் வரை வழங்கினேன்.

இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதம் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் உதவியாளா் பணிக்கான நியமன ஆணையை சத்யராஜ் என்னிடம் வழங்கினாா். பின்னா், என்னை உதகைக்கு மாற்றிவிட்டதாகக் கூறி, அங்கு அழைத்துச் சென்றாா். அங்கே அறை எடுத்து தங்கிய சில நாள்களுக்குப் பிறகு சிதம்பரம் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் வாங்கிவிட்டதாகத் தெரிவித்து என்னை அழைத்து வந்தாா். இதனால், எனக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் விசாரித்தபோது போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது என்று அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி பிறப்பித்த உத்தரவின்பேரில், குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கனகேசன், ஆய்வாளா் துா்கா ஆகியோரது மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில், சத்யராஜ் மோசடி செய்தது தெரியவந்ததும், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த த.செந்தில்குமாா் (43) என்பவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com