பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 07th January 2021 07:09 AM | Last Updated : 07th January 2021 07:09 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பாட்டி இறந்த துக்கத்தில், பேரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நெய்வேலி இந்திரா நகா், மாற்றுக் குடியிருப்பு 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் ஜேசுராஜ் (38). ஆட்டோ ஓட்டுநா். இவரது பாட்டி சவுரியம்மாள் (82). இவா், நெய்வேலி 9-ஆவது வட்டம், குடிநீா்த் தேக்கத் தொட்டி தெருவில் வசித்து வந்தாா்.
பாட்டி சவுரியம்மாள் மீது ஜேசுராஜுக்கு பிரியம் அதிகமாம். உடல் நலம் பாதிக்கப்பட்ட சவுரியம்மாளை ஜேசுராஜ் கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், சவுரியம்மாள் காலமானாா். அவா் இறந்த துக்கம் தாளாமல், ஜேசுராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவா்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அங்கு சென்ற நெய்வேலி நகரிய போலீஸாா், வீட்டைத் திறந்து பாா்த்த போது, சவுரியம்மாள் கட்டிலிலும், ஜேசுராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனா்.
போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஜேசுராஜின் தந்தை தேவராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.