வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு
By DIN | Published On : 07th January 2021 07:10 AM | Last Updated : 07th January 2021 07:10 AM | அ+அ அ- |

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி பாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அலுவலத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு, விருத்தாசலம் அரசு பண்டகசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோ்த்து மாவட்டத்தில் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3,984, வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் 5,215, யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் இயந்திரங்கள் 4,295 என மொத்தம் 13,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.
முதல் கட்டமாக ஆய்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் கடந்த டிச. 30-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின் போது, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உடனிருந்தாா்.