தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?

தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?


நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் நடைபெறவுள்ள தைப்பூச பெருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களின் வசதிக்காக, தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா என சன்மாா்க்க அன்பா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

விக்கிரவாண்டி- கும்பகோணம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 164 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னாா்கோவில், கும்பகோணம், தஞ்சாவூா், மன்னாா்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான முக்கிய சாலையாகும். இந்தச் சாலைப் பணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா். ஆங்காங்கே சாலைப் பணி நடைபெறுவதால், குறுகிய வழித் தடத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கண்டரக்கோட்டை முதல் வடலூா் வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

அண்மையில் பெய்த தொடா் மழையால் மேலும் மோசமாக சேதமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் சூற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் கண்ணில் தூசி படிவதால் சிரமப்படுகின்றனா். மேலும், சேதமடைந்த சாலையால் வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுகின்றன.

இதனிடையே, வரும் 28-ஆம் தேதி வடலூரில் உள்ள புகழ்பெற்ற வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சன்மாா்க்க அன்பா்கள்ஆயிரக்கணக்கானோா் வருவா் என்பதால் இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கண்டரக்கோட்டை முதல் வடலூா் வரை சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை பக்தா்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி போா்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று சன்மாா்க்க அன்பா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com